மெய் விசுவாசம் நம் ஜீவியத்தை மாற்றும் ஆண்டவர் எதிர்பார்க்கிற விசுவாசம் என்ன? மெய் விசுவாசம் நம் ஜீவியத்தை மாற்றும் என்றும், ஆண்டவர் எதிர்பார்க்கிற விசுவாசம் என்ன என்றும் தமிழகத்தில் பெயர் பெற்ற மறைந்த ஊழியர் சகோ. பரமானந்தம் ஐயர் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள தேவ செய்தியின் சுருக்கம் வருமாறு: “நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்'' 2 கொரி. 5: 6 கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் மாறுதலடைந்தவர்கள் விசுவாசிகள் என்று பெயர் பெற்றார்கள். “விசுவாசிகளான திரளான கூட்டத்தார்'” என்றும், “விசுவாச மார்க்கத்தார்” என்றும், “விசுவாச குடும்பத்தார்” என்றும், ''திரளான புருஷரும் ஸ்திரீகளும் விசுவாசிகளானார்கள் என்றும்”, "ஆசாரியரில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள் என்றும் வாசிக்கிறோம். விசுவாசிகளான இவர்களை மற்றவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தார்கள். மெய் விசுவாசம் ஜீவியத்தை மாற்றும் விசுவாசமில்லாதவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஆயிரம் முறை வாயினால் சொன்னாலும் அவர்கள் அவிசுவாசிகளே. மெய் கட்டாயம் நமது ஜீவியத்தை மாற்றும். தங்கள் குணத்தில், நடக்கையில் மாறுதல் இலலாதவர்கள் விசுவாசிகள் அல்ல. விசுவாசத்தைப் பார்க்கிலும் அன்பு பிரதானமானாலும் விசுவாசமில்லாமல் அன்பு வராது. விசுவாசமில்லாமல் ஒன்றுமே ஆகாது. ஆகையால் ஆண்டவரும், அப்போஸ்தலரும் விசுவாசத்தை அவ்வளவு சிரேஷ்டமாகப் பேசியிருக்கிறார்கள். நமது இரட்சிப்பு விசுவாசத்திலே பிறந்து, விசுவாசத்திலே வளர்ந்து, விசுவாசத்திலே பூரணப்படுகிறது. வித்தியாசம் இருக்க வேண்டும் கிறிஸ்து மார்க்கம் விசுவாச மார்க்கம். வேத புஸ்தகம் விசுவாச புஸ்தகம். அப்போஸ்தலர் நடபடி முழுவதும் விசுவாசமாயிருக்கிறது. விசுவாசித்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் சபையின் அங்கத்தினர்களானார்கள். இதுவே ஒழுங்கு, அவிசுவாசிகளுக்கு அங்கே இடமில்லை. இவர்கள் விசுவாசிகளோடு சேரத் துணியவுமில்லை. ஆதிச்சபையில் அவ்வளவு பலத்த வித்தியாசமிருந்தது. (அப். 2:37-42). தற்காலச் சபைகளிலோ அவிசுவாசிகளும் விசுவாசிகளும் கலந்திருக்கிறார்கள். இதுவே சபைகளில் நாம் காண்கிற சகல அக்கிரமங்களுக்கும், சங்கடங்களுக்கும் காரணம். கிறிஸ்துவோடு கூடயிருந்து. அவர் போதனைகளைக் கேட்டு, அவர் செய்த அற்புதங்களைக் கண்ட அப்போஸ்தலரும் மற்றவர்களும் அவரை விசுவாசிப்பது இலேசு என்றும், நமக்கோ அது கஷ்டமென்றும் நினைக்கிறோம். ஒரு விதத்தில். இது சரியே. ஆனால் அவரைக் கண்டவர்களானாலும் சரி, காணதவர்களானாலும் சரி, எல்லோருக்கும் ஏற்பட்ட வழி விசுவாச வழிதான். அவரைக் கண்டவர்கள் விசுவாசிப்பதற்கு அவர் காரணமாயிருந்தது போலவே. அவரைக் கண்டவர்கள் விசுவாசிக்கக் கூடாதபடி அவரது எளிய பிறப்பும், தரித்திர வாழ்க்கையும், சஞ்சரித்த கலிலேயா நாடும் காரணமும் இடறலுமாயிருந்தன. (யோவான் 8: 31-48) விசுவாசம் இலேசான காரியம் அல்ல. கிறிஸ்து அருமையானவர், அவர் மீது வைக்கும் விசுவாசமும் அருமையானது. அது அதிக விலையேறப்பெற்றது. இயேசுதான் கடவுள் என்று விசுவாசியுங்கள் தம்மோடிருந்த சீஷர்கள் தம்மை விசுவாசிக்கும்படிக்கு ஆண்டவர் எவ்வளவோ பிரயாசப்பட்டார். இயேசு கிறிஸ்து வாக்கிலும், செய்கையிலும் வல்லமையுள்ள தர்க்கதரிசி என்று விசுவாசிப்பதல்ல. அவர் ஒப்பற்ற போதகரென்று ஒப்புக் கொள்வதல்ல. இவை அவர்கள் நிச்சயமாக அறிந்த விஷயங்கள். ஆண்டவர் அவர்களிடம் எதிர்பார்த்த விசுவாசம் வேறே தமக்கும் பிதாவுக்குமுள்ள தெயவீக சம்பந்தத்தை அவர்கள் நம்பும்படி விரும்புகிறார். "நான் என் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள். அது கஷ்டமாயிருந்தால், என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்'' என்கிறார். (யோவான் 14:4-11). கிறிஸ்துவைப் பற்றி எத்தனை காரியங்களை நாம் நம்பினாலும், அவரைப் பற்றி எவ்வளவு அறிவு நமக்கிருந்தாலும் “அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட கடவுள்'' என்பதை நாம் நம்பாமற் போனால் நாம் அவருக்கு சீஷராயிருக்க முடியாது. (1 தீமோ . 3 : 15-16, 1 யோவான் 5: 20) அவ்வாறு நம்புவது இலேசல்ல. அதிகாரிகளால் அநேகர் அவருக்கு எதிர்த்து நின்ற காரணம் அதுதான். "நீ மனுஷனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே'' என்றார்கள். ஆண்டவர் அதை மறுக்கவில்லை. கிறிஸ்துவின் தெய்வீகத்தை நம்புவதற்கு ஆவியின் வெளிப்படுத்தல் அவசியம். “பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கர்த்தரென்று ஒருவனும் சொல்ல முடியாது.'” (ரோமர் 8: 57, 1 கொர் 2 : 7-8; 1 கொரி. 12 : 3.). இந்த விசுவாசத்திலே திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டது பேதுரு அவரது தெய்வீகத்தை அறிக்கை செய்தபோது, “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்' என்றார். (இயேசு தான் கிறிஸ்து என்ற வெளிப்பாட்டின் மேல்)”. அப்போஸ்தலரும் ஆதித்திருச்சபையாரும் இந்த விசுவாசத்திலே பிழைத்து உழைத்தார்கள். இந்த விசுவாசத்திற்காக தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். பவுல் கிறிஸ்துவை தரிசித்த போதிலும் கடந்து போன அந்தக் காட்சியை நினைத்துக் கொண்டே பிழைத்தவரல்ல. தன்னை ஆட்கொண்ட தெய்வீக இரட்சகரை அனுதினமும் நம்பிப் பிழைத்தார், உழைத்தார். அவரிடம் சென்றார். கிறிஸ்துவின் மீதுள்ள அந்த விசுவாசத்தை கடைசி வரை காத்துக் கொண்டார். (2 தீமோ. 4:7) மேலும் சில ஆவிக்குரிய வெளிப்பாடுகளை வாசித்து விசுவாசத்தின் பயனைப் பெறுவோம். தேவனுடைய கரங்களில் ஒரு மனிதன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. சகோதரன் பிரான்ஹாம் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லுக்குத் திரும்ப வந்து ஏழு நாட்கள் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்தார். அப்பொழுது தேவனுடைய சத்தம் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து அவருடன் பேசி வெளிப்படுத்தின விசேஷம் 5 முதல் 5 வரையிலுள்ள அதிகாரங்களில் மறைந்து கிடந்த இரகசியங்களின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்திக்கொடுத்தது. அந்த வெளிப்பாடு, சகோதரன் பிரானஹாம் உட்பட மற்றுமுள்ளோர் யாவரும் அதுவரை கருதியிருந்தவைகளுக்கு முரணாக அமைந்திருந்தது. ஆயினும் அது தேவனுடைய வார்த்தையுடன் பிழையின்றி பொருந்தினது. இந்த ஏழு முத்திரைகளின் பேரில் சகோதரன் பிரான்ஹாம் ஏழு இரவுகள் தொடர்ச்சியாக பிரசங்கம் செய்தார். (மார்ச்சு 17-24, 1963). அவர் அப்பொழுது நிகழ்த்திய பிரசங்கங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அதன் மூலம், “ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்கார ராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவ ரகசியம் நிறைவேறும்.'' (வெளி. 10 : 6) என்னும் வேத வாக்கியம் நிறைவேறியது. சகோதரன் பிரான்ஹாம் 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடிபோதையிலிருந்த ஒருவனால் நேர்ந்த விபத்தில் மரித்தார். (யோவான் 3 : 28-30) ஆனால் அவரை உபயோகித்து தேவனளித்த செய்தியோ மரிக்க முடியாது. சகோதரன் பிரான் ஹாமின் ஆயிரத்துக்கும் மேலான வெவ்வேறு பொருளின் பேரிலுள்ள பிரசங்கங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அவை உலகெங்கும் சுற்றி, மாறுபாட்டிற்கு விரோதமாக கூக்குரலிட்டு, இயேசு கிறிஸ்து வெகு விரைவில் வரப்போகின்றார் என்று ஆத்துமாக்களுக்கு எச்சரிக்கை விடுத்து. தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு சத்தியத்தை விரித்துரைத்து, இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகின்றன ...... அது ஏழாம் தூதனின் சத்தமாகும். இவை யாவும் ஒரு மனிதனை உயர்த்துவதாக எண்ண வேண்டாம். கிறிஸ்து மாத்திரமே உயர்த்தப்படுகின்றார்! சகோதரன் பிரான்ஹாம் தானாக ஒன்றுமே செய்திருக்க முடியாது (யோவான் 3:27). இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மாமிசத்தில் நடந்த போது செய்த அதே கிரியைகளை இந்த தாழ்மையுள்ள தீர்க்க தரிசியின் மூலம் மறுபடியும் நடப்பித்தார் (எபி. 13:8). எனவே நீங்கள் மனிதனை பாராதேயுங்கள் அவர் கொண்டு வந்த செய்தியை மாத்திரம் கவனியுங்கள். ஏனெனில் அச்செய்தி. ஸ்தாபனங்களின் பிரமாணங்களுக்கும் பாரம் பரியங்களுக்கும் அப்பாற்பட்ட தூய்மையான இயேசு கிறிஸ்துவினிடம் உங்களை வழிநடத்தும். ''நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுபவர்களாயிருங்கள்" என்று பவுல் அப்போஸ்தலன் கூறினாரல்லவா? (1 கொரி 11:1, 4:6) நீங்கள் பவுலுக்குக் கீழ்ப்படியும் போது, ஒரு மனிதனைப் பின்பற்று பவர்களாயிராமல், அவர் மூலம் பேசின பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிகின்றர்கள். ஒருவர் இவ்விதமாய் எழுதியுள்ளார் "இந்த மனிதன், வில்லியம் பிரான்ஹாம், தேவனிடமிருந்து நூற்றுக் கணக்கான உறுதிப்படுத்துதல்களைப் பெற்று அவைகளை அற்புதங்களாக வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி தீர்க்கதரிசியின் உத்தியோகத் திருகேற்ற மற்றெல்லா அம்சங்களும் அவர் வாழக்கையில் காணப்பட்டன. எனவே அவர் பாரென்பதைப் பொறுத்து அவரை ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். ''ஆம். அவர் பாரென்பதைப் பொறுத்து அவரை ஏற்றுக் கொள்ளுதல் அவசியம்." அவருடைய உதடுகின் மூலம், 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று உரைத்தவைகளுக்குமிடையே எவ்வித வேறுபாடுமில்லை. ஏனெனில் அதே பரிசுத்த ஆவியானவர் இவவிருவரின் மூலம் கிரியை செய்தார். பவுலின் காலத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால், பவுலை அடையாளம் கண்டு கொண்டிருப்பீர்களா? அல்லது நோவா, எலியா, எரேமியா இவர்களின் காலத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால், அவர்களை தீர்க்கதரிசிகளாக அங்கீகரித்து அவர்களுடைய செய்திக்கு செவி கொடுத்திருப்பீர்களா? பாலஸ்தீனாவில் ஒரு தூரமான பாகத்தில் நீங்கள் வாழ்ந்திருந்து, இயேசு என்னும் பெயர் கொண்ட ஒருவர் மகத்தான அற்புதங்களைச் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டால் என்ன செய்திருப்பீர்கள்? அவர் யாரென்பதைப் பொறுத்து அவரை அப்பொழுது அடையாளம் கண்டு கொண்டிருப்பீர்களா? அல்லது முந்தைய காலங்களில் தேவன் செய்ததை விசுவாசித்து, அவர்களுடைய நாட்களில் அவர் செய்து வந்ததை அங்ககரியாமற் போன பரிசேயர் களைப் போல் நீங்களும் இருப்பீர்களா? "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ. நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை சிங்காரித்து, எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால் அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன் பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆகையால் தீர்க்கதரிசிகளை கொலை செய்கிறவர்களுக்கு புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக் குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்" (மத். 23:29-31) என்று இயேசு அறை கூவினார். தேவன் இந்த கடைசி சந்ததியாரை ஒரே மகத்தான தீர்க்கதரிசியின் மூலம் சந்தித்து விட்டார். அந்த தீர்க்கதரிசி தாழ்மையுள்ளவராய், பொருளையும், புகழையும் விரும்பாமல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையையும் அளிக்க சற்றேனும் தவறாதவராய் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கையை நான் சுருக்கமாக சித்தரித்தேன். தேவன் அவரை அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் உறுதிப்படுத்தி நிரூபித்ததை நான் சுருக்கமாக விவரித்தேன் இவையிரண்டும் வேத வாக்கியங்களுடன் பொருந்துகின்றன (மல்கியா 3:6) என்பதையும் நான் காண்பித்தேன். இவையனைத்தையும் நான் சுருக்கமாகவே கூறினேன். ஆயினும் அவர் கொண்டு வந்த செய்தியைக் குறித்து நான் ஒன்றுமே கூறவில்லை. அவரளித்த செய்திதான் மிக முக்கியம் வாய்ந்தது. இனி அது உங்களது அபாறுப்பு அவருடைய செய்திகளடங்கிய புத்தகங்களும், ஒலிநாடாவும் உள்ளன. எனவே நீங்கள் பரிசோதித்து, அத்தாட்சிகளைக் கூர்ந்து கவனித்து, தேவனுடைய வார்த்தையை ஆராயந்து பார்த்து ஜெபிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். இது சத்தியம் என்று நீங்கள் தாமானித்தால் அதை விசுவாசியுங்கள். கடைசிக் கால தீர்க்கதரிசி இவ்வுலகில் வந்து போய் விட்டதால், காலம் எவ்வளவு தாமதமாகி விட்டது! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக நிகழ வேண்டிய ஏழு முக்கியமான சம்பவங்களை தேவன் 1933ம் ஆண்டில் சகோதரன் பிரான்ஹாமுக்கு தொடர்ச்சியாக தரிசனத்தில் காண்பித்தார். அவைகளை சுருக்கமாக இங்கு கூறுகிறேன். 1) முதலில் அவர் இத்தாலியா நாட்டின் சர்வாதி காரியான முசோலினியைக் கண்டார். அவன் எத்தியோப்பியாவை கைப்பற்றுவான் என்றும், முடிவில் அவனுடைய சொந்த ஜனங்களே அவனைப் புறக்கணித்து. அவமானமான முடிவை அடைவான் என்றும் அத்தரிசனம் உரைத்தது. 2) அடுத்ததாக அவர் அடால்ஃப் ஹிட்லர் என்னும் பெயர் கொண்ட ஆஸ்திரியா நாட்டு வாலிபன் ஒருவனை தரிசனத்தில் கண்டார். அவன் ஜெர்மனி நாட்டில் ஆதிக்கம் பெற்று, உலகத்தை மகா யுத்தத்திற்குக் கொண்டு செல்வானென்றும். ஆனால் ஜெர்மனி தோல்வியடைந்து ஹிட்லர் மர்மமான முடிவை அடைவான் என்றும் அத்தரிசனம் உரைத்தது. 3) மூன்றாவதாக தோன்றின தரிசனத்தில், மூன்று பெரிய கொள்கைகள் - பாசிசம். நாசிசம், கம்யூனிசம் என்பவை - உலகில் தலையெடுப்பதை அவர் கண்டார். ஆனால் கம்யூனிசம் மற்ற இரு கொள்கைகளையும் விழுங்கிவிடுமென்பதையும் அத்தரிசனம் உரைத்தது 4) நான்காம் தரிசனத்தில், இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்பு விஞ்ஞானத்தில் ஏற்பட்ட பிரம்மாண்டமான முன்னேற்றத்தை அவர் கண்டார். 5) ஐந்தாம் தரிசனத்தில், உலகத்தில் நல் நடத்தை குன்றிப் போவதை அவர் கண்டார். அது முற்றிலும் ஸ்திரீகளையே சார்ந்திருந்தது. பெண்கள் மயிரை கத்தரித்துக் கொள்ளுதலையும், புகைபிடித்து, மது அருந்தி ஆண்களின் உடைகளை அணிந்து கொண்டிருப்பதையும் அவர் கண்டார். (இந்த ஐந்து சம்பவங்களும் 1933ம் ஆண்டிலேயே அதாவது இவை நிறைவேறுதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கு காண்பிக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்ளவும்) 6) ஆறாம் தரிசனத்தில், ஒரு அழகான ஆனால் கொடூரமான ஸ்திரீ அமெரிக்காவில் எழும்பி, அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதை அவர் கண்டார். (இது ஒருக்கால் ரோமன் கத்தோலிக்க சபையைக் குறிக்கலாம் என்று சகோதரன் பிரான்ஹாம் கருதினார். ஆனால் அவர் திட்டவட்டமாக ஒன்றும் கூறவில்லை). 7) கடைசியாக தோன்றின தரிசனத்தில், ஒரு பயங்கர வெடி சத்தத்தைக்கேட்டார். அவர் திரும்பிப் பார்த்தபோது, உலகில் ஒரு முக்கியமான தேசம் எரிந்து அழிந்து போய் புகைக்காடாய் இருப்பதைக் கண்டார். கண்கள் காணும் தூரம் வரைக்கும் எந்த உயிரினமும் காணப்படவில்லை. அங்கே ஆழமான குழிகளும் புகைந்து கொண்டிருக்கும் இடிந்த குவியல்கள் மாத்திரமே காணப்பட்டன. அதன் பின்பு தரிசனம் மறைந்து போயிற்று. சகோதரன் பிரான்ஹாம், "நண்பர்களே, நாம் முடிவுக்கு வந்துவிட்டோம். விரைவில் சமயம் கடந்து செல்லும். லட்சக்கணக்கானோர் உயிர் இழப்பார்கள். இப்பொழுது இரட்சிக்கப் பட்டதாய் கருதியுள்ள லட்சக்கணக்கானோர் அணு சக்தி காலத்தில் அக்கினிக்கு இரையாவார்கள். நாம் கடைசி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கிருபையினாலும். அவருடைய ஒத்தாசையினாலும் அவருடைய ஜனங்கள் வெகு விரைவில் பிரத்தியட்சமாக இருக்கும் இயேசு கிறிஸ்து வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டுமென்று என்னால் அவர்களிடம் கூற முடிந்தது. சகோதரன் பிரான்ஹாமே, அவர் வர எவ்வளவு காலம் செல்லும்? என்று நீங்கள் கேட்கலாம். ஒருக்கால் இருபது ஆண்டுகள் செல்லலாம். அல்லது ஐம்பது ஆண்டுகள் அல்லது நூறு ஆண்டுகள் - எனக்குத் தெரியாது. ஒருக்கால் இன்று காலை அவர் வரலாம். அல்லது இன்றிரவு வரலாம் -- எனக்குத் தெரியாது. எனவே நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று. நான் கர்த்தரின் நாமத்தினால் பேசுகிறேன் என்பதை நினைவு கூருதலேயாகும். ஆயத்தமாயிருங்கள், எந்த நேரத்தில் என்ன சம்பவிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகிவிட்டது. உண்மையாக, நாம் விளையாடிக் கொண்டிருக்க இது நேரமில்லை. நாம் மிகவும் கருத்துள்ளவர்களாய் இருக்க வேண்டும் இல்லையேல் நாம் மரிக்க நேரிடும் (லூக்கா 11: 31-32). சகோதரன் பிரான்ஹாம், "தேவன் சபிக்கப்பட்ட இவ்வுலகை தகர்த்து அதை அசைக்கப் போகிறார் . அந்த அதிர்ச்சியை தாங்குவதற்கு ஒரே ஒரு இடம் தான் உண்டு. அதுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மந்தைக்குள் வருதலேயாகும். தேவனுடைய இரக்கங்கள் நமக்கு கிடைக்கிப் பெறும் இச்சமயத்திலேயே , உங்கள் முழு ஜீவியத்தையும் எவ்வித தங்கு தடையுமின்றி, அவருக்கு அர்ப்பணிக்க உங்களை வேண்டிக் கொள்கிறேன். அவரே உண்மையுள்ள மேய்ப்பனாக உங்களைக் காத்து, பராமரித்து தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்துவார்' என்று கூறியிருக்கிறார்.